×

இன்று காதலர் தினம் பொள்ளாச்சி மார்க்கெட்டில் பெங்களூர் ரோஜாவுக்கு ‘கிராக்கி’

*1 கட்டு ரூ.350-க்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டில், காதலர் தினத்தையொட்டி பெங்களூர் ரோஜாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. இதில் நேற்று 20 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ.320 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை மற்றும் உள்ளூர் பகுதியிலிருந்து தினமும் கொண்டு வரப்படும் மல்லிகை, செவ்வந்தி, முல்லை, செண்டுமல்லி, சில்லிரோஸ் உள்ளிட்ட பூ வகைகள், மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒசூர், பெங்களூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ரோஜாக்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.

ஆனால் தற்போதும் தொடர்ந்து பனிப்பொழிவால், ஊட்டியிலிருந்து ரோஜா வரத்தும், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து பல்வேறு நிற ரோஜாக்களின் வரத்து குறைவால், ஒவ்வொரு நாளும் ரோஜா வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில், இன்று (14ம் தேதி) புதன்கிழமை காதலர் தினம் என்றாலும், ஒசூர் மற்றும் பெங்களூரில் பனிப்பொழிவு இன்னும் தொடர்கிறது. அங்கிருந்து ரோஸ், சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட சில கலரில் ரோஜாக்கள் குறைவாகவே விற்பனைக்கு வந்தது.

காதலர் தினத்தையொட்டி, ரோஜாவுக்கு அதிக கிராக்கியால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ஒரு கட்டு ரோஜா ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.230 வரை விற்பனையானது. ஆனால் நேற்று, 20 எண்ணம் கொண்ட ஒருகட்டு ரோஜா விலை ரூ.300ல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் மல்லிகை உள்ளிட்ட பிற பூக்களின் விலை சரிந்து வரும் நேரத்தில், நேற்று வெளியூர் ரோஜாக்களின் விலை அதிகமானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post இன்று காதலர் தினம் பொள்ளாச்சி மார்க்கெட்டில் பெங்களூர் ரோஜாவுக்கு ‘கிராக்கி’ appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Bangalore Rose ,Pollachi Market ,POLLACHI ,MARKET ,KOWAI DISTRICT ,Dinakaran ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...